-->

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

குட்டு வைத்து சொல்லித் தருகிறார்கள்...

அமெரிக்காவில் நியூயார்க் விமான நிலையத்தில் நடிகர் ஷாரூக் கான் இடப்பெயர்வு சான்றளிப்புக்காக இரண்டு மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தடுத்து நிறுத்திவிட்டு மன்னிப்புக் கேட்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறது அமெரிக்கா என்றும்கூட அவர் குறிப்பிட்டார்.


ஆனால், அமைச்சரிடம் காணப்பட்ட இந்தக் கொந்தளிப்பு ஷாரூக் கான் ரசிகர்களிடம் இல்லை. எந்தவிதமான பரபரப்பும் காணப்படவில்லை. குறைந்தபட்சம் ஏதாவது ஓர் அமெரிக்கத் தூதரகத்தின் வாசலில் ஷாரூக் கான் ரசிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று எதிர்பார்த்தால் அதுவும்கூட நடக்கவில்லை.

இடப்பெயர்வு அதிகாரிகளால் நடிகர் ஷாரூக் கான் தடுத்து நிறுத்தப்படுவது இது இரண்டாவது முறை. 2009-ஆம் ஆண்டு நியுஆர்க் விமான நிலையத்தில் (நியுஜெர்சி) தடுத்து நிறுத்தப்பட்டார். தற்போது நியூயார்க் விமான நிலையத்தில். இந்தப் பயணம் வெறும் சுற்றுலாப் பயணம் அல்ல. முகேஷ் அம்பானி குடும்பத்துடன் தனி விமானத்தில் சென்று "யேல்' பல்கலைக்கழகத்தில் பெலோஷிப் விருது வாங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்கான பயணம். ஆகவே, இவரது பயணத்துக்கு விசா கொடுக்கும்போதே அமெரிக்கா இதுகுறித்துத் தெளிவான, அதிகாரப்பூர்வமான தரவுகளின் அடிப்படையிலேயே இவருக்கு விசா வழங்கியிருக்க முடியும். இருந்தும் கடைசி நேரத்தில் இவ்வாறு நிறுத்தி வைத்து அவமானப்படுத்துவது ஏன் என்பது புரியவில்லை.

இந்த விவகாரத்தில் மனவருத்தம் இருந்தாலும்கூட, ஷாரூக் கான் இதை இலகுவாக எடுத்துக்கொண்டிருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசவே இல்லை. யேல் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பேசும்போதுதான் இதை ஒரு வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார். ""எனக்குக் கொஞ்சம் தலைக்கனம் ஏறும்போதெல்லாம் ஒருமுறை அமெரிக்கா வருவேன். இங்குள்ள இடப்பெயர்வு சான்று அதிகாரிகள் எனக்குள் இருக்கும் சூப்பர் ஸ்டாரை உதைத்து வெளியேற்றிவிடுவார்கள்'' எனும் அவரது வேடிக்கைப் பேச்சு, ஒருவிதமான வேதனைப் பேச்சு என்பதை உணர முடிகிறது.

"மை நேம் இஸ் கான்' என்ற படத்தில் ஷாரூக் கான் நடித்திருக்கிறார். இந்தப் படம் அமெரிக்காவில் நடைபெறும் கதை. முஸ்லிம் பெயர் இருப்பதால் அமெரிக்காவில் தன்னை அனைவரும் சந்தேகத்துடன் பார்க்கப்படுவது குறித்த கதை இது. அந்தப் படக் கதை முழுக்க முழுக்க உண்மை என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இது வேதனையானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதன் மூலம் இந்தியாவுக்கு அமெரிக்கா ஒரு பாடத்தைச் சொல்லித் தருகிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதே சம்பவம் ஓர் அமெரிக்க நடிகருக்கு இங்கே நேர்ந்திருக்குமெனில், அதை அமெரிக்கா எப்படி எடுத்துக் கொண்டிருக்கும்? நடிகை ஆஞ்சலினா ஜூலி மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம், உடனடியாக பாலிவுட், கோலிவுட் நடிகர்கள் ஆதரவாகக் களத்தில் குதிப்பார்கள். ஒரு கலைஞனுக்கு ஏற்பட்ட அவமதிப்பு என்பார்கள். இடப்பெயர்வு அதிகாரிகள் மீது இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, குறைந்தபட்சம் அவர்களைப் பணியிடை நீக்கம் செய்து, நம் உள்ளூர் நடிகர்களையும், அமெரிக்காவையும் சமாதானம் செய்யும்.

அதுதான் அமெரிக்காவில் நடக்கவில்லை. அங்கும் அறிவுஜீவிகள் உண்டு. எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டம் உண்டு. ஆனால், இதற்காக அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்வதும் நடவடிக்கை எடுப்பதும் அங்கே காணப்படாதவை. அதிகாரிகள் அவர்கள் கடமையைச் செய்தார்கள் என்பதற்காகப் பாராட்டப்படுகிறார்கள்.

ஓர் அரசு தன் நிலையிலிருந்து இறங்கிப் பகிரங்க மன்னிப்புக் கேட்டாலும் கேட்குமே தவிர, அதிகாரிகள் மீது பழி போடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், ஷாரூக் கான் எதற்காகத் தடுத்து நிறுத்தப்பட்டார் என்று அதிகாரிகளிடம் விளக்கம்கூடக் கேட்கவில்லை அமெரிக்க அரசு. அதிகாரிகளை அந்த அளவுக்கு அரசியல் தலையீடு இல்லாமல் கடமையாற்ற விடுகின்றது. இதைத்தான் இந்தியா கற்க வேண்டிய பாடமாகக் கொள்ள வேண்டும்.

நெடுஞ்சாலைச் சுங்கச் சாவடிகளில்கூட கட்சிக் கொடியிருந்தால் கட்டணம் செலுத்தாமல் போக முடியும். ஆட்சியும் பதவியும் இருந்துவிட்டால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஏவலாளிகளாகி விடுகிறார்கள். அரசியல்வாதிகளின் குடும்பத்தினராக இருந்தால் அவர்களைச் சோதனையிடக்கூடாது. இப்படியெல்லாம் இந்தியாவில் மட்டும்தான் நடக்கும். இதுதான் மக்களாட்சியின் மகத்துவம் என்று நாம் பெருமையடித்தும் கொள்வோம்.

 காவல்துறையிலும், இத்தகைய இடப்பெயர்வு விவகாரத்திலும் அமெரிக்கா இத்தனைக் கறாராக இருப்பதை முஸ்லிம் தீவிரவாதத்தின் மீதான பயம் என்று சொல்லலாம். ஆனால், அதிகாரிகள் கடமையாற்றுவதில் தலையிடாத இந்தப் போக்குதான் அமெரிக்காவில் 9/11 க்குப் பிறகு மீண்டும் ஒரு சம்பவம்கூட நடக்காமல் காத்து வருகின்றது என்பதையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

முந்தைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சென்றபோது அவரைச் சோதித்துப் பார்த்து உள்ளே அனுமதித்தனர். அதற்காகப் பிறகு மன்னிப்புக் கோரியது அமெரிக்கா.

உலக இந்தியர்கள் அனைவருக்கும் அடையாளம் தெரிந்த நபரான நடிகர் ஷாரூக் கான் இரண்டு முறை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். மன்னிப்புக் கேட்கிறது அமெரிக்கா.

மெரிக்கா சொல்லித் தரும் பாடம் என்ன? நீங்கள் எங்களை மட்டுமல்ல, இந்தியாவுக்குள் வரும் அனைவரையும் சோதனை செய்யுங்கள். அந்தக் கடமையைச் செய்வதில் அரசியலைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். ஹிலாரி கிளிண்டன் வந்தாலும் சோதனை செய்து வர விடுங்கள். அதிகாரிகளைத் தங்கள் கடமையைச் செய்யவிடுங்கள் என்கிறது அமெரிக்கா.

குட்டு வைத்து சொல்லித் தருகிறார்கள். நமக்குத்தான் மண்டையில் ஏறமாட்டேன் என்கிறது

நன்றி: தினமணி  
Blogger Widget

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக