-->

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

தடம் மாறிய ரயில்

மாணவர்களுக்கான தேர்வு முடிவு அறிவிக்கப் பட்டிருக்கும் இவ்வேளையில் இக்கட்டுரை பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

பலமுறை நாம் நினைத்திருக்கக்கூடும், நாம் இப்பொழுது செய்துக் கொண்டிருக்கும் வேலை நமக்கு பிடித்தவையா என்று.


கல்லூரியிலிருந்து பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, கல்லூரி முடிந்து விடுமுறையை (வாழ்வில் மாதக்கணக்கில் கிடைக்கும் கடைசி விடுமுறை) அனுபவிப்பதற்கு முன் பணிக்கு அழைக்கப் பட்டு, பணிக்கு சேர்ந்த சில நாட்களில், என்னுடன் பணிபுரியும் சக நண்பர் ஒருவர் கேட்டார்,  நான் படித்ததற்கும் இங்கு எனக்கு கொடுக்கப்பட்ட வேலைக்கும் சம்பந்தமே இல்லையே என்று...

நியாயம் தான்! அவர் படித்ததோ இயந்திர பொறியியல், தேர்ந்தெடுக்கப்பட்டதோ மென்பொருள் நிறுவனத்தில். கட்டிடப் பொறியியல், மின்னணு பொறியியல், வானூர்தி பொறியியல், ஜவுளி பொறியியல் என்று படித்த பலருடைய நிலைமை இது தான்.

பள்ளியில் படிக்கும்போது விடியற்காலையில் எழுந்து, குறைந்த மதிப்பெண் எடுத்தபோது வீட்டில் வசவு வாங்கி, அக்கம் பக்கத்தில் நம் வயதொத்த சக மாணவர்களின் மதிப்பெண்ணுடன் நம் மதிப்பெண்ணை ஒப்பிட்டு, அதிலிருந்து அடித்துபிடித்து கஷ்டப்பட்டு வாங்கிய மதிப்பெண்ணை வைத்துக்கொண்டு,  இட ஒதுக்கீட்டிற்காக காத்திருந்து,  இட ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காதவர்கள் சிலர் நன்கொடை கொடுத்து ஒரு நல்ல கல்லூரியில் சேர்ந்து, மூன்று/நான்கு வருடங்கள் படித்து முடித்து ஒரு நிறுவனத்தில் சேரும்போது, நாம் கடினமாக படித்த படிபிற்கும், சேரப்போகும் பணிக்கும் பொருத்தம் உள்ளதா என்று பார்த்து சேர்வது அவர்களின் கடமை என்று தான் கூற வேண்டும்.

சிலர் தாம் படித்த துறையில் தான் செல்லவேண்டும் என்று பொறுமையோடிருந்து வெற்றி பெறுகின்றனர். சிலர் குடும்ப சூழல் காரணமாக வேலை கிடைத்தால் போதும் என்று படித்ததற்கும், செய்யப் போகும் வேலைக்கும் சமந்தம் இல்லை என்றாலும் அதில் சேர்ந்து வேறு வழி இல்லாமல் வருந்துகின்றனர்.

மென்பொருள் துறை அவ்வபோது சந்திக்கும் மந்த நிலையின்போது, நான் படித்த துறைக்கே சென்றிருக்க வேண்டும் என்று புலம்புவதனால் ஒரு பயனும் இல்லை என்பதை நாம் முன்பே உணரவேண்டும்.

தம் சுற்றத்தினர்க்கும், பள்ளியில் படிக்கும் உறவினர்களுக்கும் இதுபற்றி முன்பிருந்தே ஆலோசனை வழங்குவதும், நமக்கு தெரிந்த அனுபவங்களை கூறுவதும் அவர்களுக்கு நாம் செய்யும் உதவி ஆகும்.

இது ரயிலை, அது செல்ல வேண்டிய தடத்துக்கு உண்டான தண்டவாளத்திலிருந்து தடம் மாறாமல் காப்பது போன்ற உதவி ஆகும்.

Blogger Widget

4 கருத்துகள்: