கொரோனா உயிர்கொல்லி நோயால் உலகமே ஸ்தம்பித்திருந்த சமயத்தில், விமானங்கள் ரத்து, விசா appointment கிடைக்காதது என்று பல தடங்கல்களால் மூன்றரை ஆண்டுகளாக இந்தியாவுக்கு செல்ல முடியாமல், ஒன்றரை வயது குழந்தையாக இருக்கும்போது பார்த்த எனது தங்கையின் குழந்தையை மீண்டும் எப்போது பார்ப்பேன் என்று ஏங்கியிருந்த சமயத்தில், வார இறுதி என்றால் தவறாமல் வீடியோ அழைப்பில் மட்டுமே பார்த்து வந்த அத்துக்குட்டியுடன் (அத்வித் சேஷாத்திரி) அதையும் தாண்டி ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள என்ன செய்யலாம் என்று எண்ணியபோது ஒரு நாள் whatsapp-இல் கதை ஒன்று சொல்லி அனுப்பினேன்.
அப்போது அவனுக்கு இரண்டரை வயது இருக்கும், அனுப்பிய கதை பிடித்துப்போகவே இரண்டு மூன்று நாள்கள் தூங்கும் முன்பு அந்தக் கதையையே கேட்டுக் கேட்டு ரசிக்கிறான் என்று என் தங்கை சொல்லவே, வேறு புதுக் கதையை அடுத்தடுத்த நாட்கள் அனுப்பியபோது அதையும் மிகவும் ரசித்துக் கேட்டு உறங்க ஆரம்பித்தான் என்று என் தங்கை சொல்வதை கேட்டவுடன் கிடைத்த ஆனந்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
எனக்கும் என் தங்கைக்கும் நாங்கள் சிறு வயதில் இருந்தபோது எங்கள் அப்பா நாள் தவறாமல், சலிக்காமல் கதைகள் சொல்வதை கேட்டுக்கொண்டே தூங்கிய பழக்கத்தோடு வளர்ந்தவர்கள் நாங்கள். அந்த ஒரு தருணம் மீண்டும் வந்தது போல இருந்தது. இப்படி whatsapp-இல் சில நாட்களாக கதைகளை அனுப்பியபோது, அந்தக் கதையை எனது உறவினர்களின் குழந்தைகளுக்கும் அனுப்பியபோது அந்தக் குழந்தைகளும் ரசித்து கேட்டு தூங்கினார்கள் என்று தெரிந்த சமயம் தான் இந்தக் கதைகளை அனைத்து மழலைகளுக்கும், குழந்தைகளுக்கும் கிடைக்கப்பெற செய்யவேண்டும் என்ற எண்ணம் உதித்தது.
அப்படி ஆரமித்தது தான் "கதை நேரம்" என்ற இந்தக் குழந்தைகளுக்கான ஆடியோ podcast.
பெரும்பாலான இல்லத்தில் இன்றைய குழந்தைகளின் தூங்கும் நேரம் மிக மிக தாமதமாக மாறிவிட்டது, இதற்கு முக்கிய காரணம் தொலைக்காட்சி மற்றும் கைபேசியில் காணொளிகளை தூங்கச் செல்லும் நேரம் வரை பார்ப்பது தான், iPad/கைபேசியிலிருந்து வரும் நீல வெளிச்சமானது தூக்கத்தை உண்டுபண்ணும் Melatonin என்ற அமிலத்தை சுரப்பதில் சுணக்கம் காட்டி மேலும் தூக்கத்தை தாமதமாக்கிவிடும் தன்மைக் கொண்டது.
ஆனால், சமீப ஆண்டுகளாக பெருகி வரும் podcast கலாச்சாரம் குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களையேயும் கூட தாமதமாக தூங்கும் பழக்கத்திலுருந்து மாற்ற ஆரமித்திருக்கிறது என்பது பெருகிவரும் பல புதிய podcast-களினால் தெரிகிறது. Spotify போன்ற சில பெரிய நிறுவனங்கள் பல முக்கிய பிரமுகர்களைக் கொண்டு தங்களுக்காக பிரத்தியேகமாக ஒலிநாடாக்களை தயாரித்து வெளியிட்டு வருவது, குறிப்பாக தமிழில் பல புதிய படைப்புகள் நாளுக்கு நாள் பெருகிவருவது, மக்கள் மத்தியில் இந்த podcast கலாச்சாரம் பெற்றிருக்கும் வரவேற்பைக் காட்டுகிறது.
வானொலியில் தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் சொன்ன கதைகளை கேட்காதவர்களே இருக்கமாட்டார்கள், அப்படி இருக்க முன்பு எட்டாக்கனியாக இருந்த வானொலியில் பேசுவது என்பது இன்று podcast வழியே பலருக்கும் வகை செய்துகொடுத்துள்ளது. மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரியில் படித்த சமயத்தில் சென்னை All India Radio/தூர்தர்ஷன் - ஆகாஷ்வாணியில் நான்கு, தனித் தனி பத்து நிமிட நிகழ்ச்சிகளை செய்யும் வாய்ப்பு கிடைத்தது, அங்கே வானொலி நிலையத்துக்கு சென்று பிரத்யேக அறைகளில் இருந்துகொண்டு ஒலிப்பதிவு செய்தபோதெல்லாம் பிந்தைய ஆண்டுகளில் வீட்டில் இருந்த இடத்திலிருந்தே வானொலியில் பேசுவதுபோன்ற அனுபவங்களை தனி நபர்களாலேயே செய்துகொள்ள முடியும் என்பது எண்ண சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயம்.
ஆனால் இன்றோ, நான் சிறு வயதில் அப்பாவிடம் கேட்ட கதைகள், ஓசூரில் எங்கள் வீதியில் வளர்ந்த குழந்தைகளையெல்லாம் கூட்டிக்கொண்டு வாரம் இருமுறைக்குமேல் எங்களுக்கு முதல் அத்தை என்ற ஒரு பெண்மணி கதைகள் சொல்வார், அந்தக் கதைகளை நினைவுகூர்ந்தும், பள்ளிக்கூடத்தில் என்னைக் கவர்ந்த, இன்றும் எனக்கு நினைவில் நிற்கும்படி அமைந்த துணைபாடபுத்தகத்தில் படித்த கதைகளுள் சில, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல் என்று எனது சிறு வயது குறும்பு அனுபவங்கள், இந்தியா மட்டுமல்லாது பல நாடுகளிலும் சொல்லப்படும் பொதுவான நன்னெறிக்கதைகள் என்று மொத்தம் இருபத்தெட்டு மணிநேரங்கள் கொண்ட 280க்கும் மேற்பட்ட கதைகளை இதுவரையில் கதைநேரம் podcast-இல் சொல்லி வருகிறேன். நூறாவது கதையை சொன்னபோது அத்துக்குட்டிக்கு இந்த மாமா சொல்லும் கதைகள் தவிர, தனது தாத்தா சொல்லும் கதையும் இருக்க வேண்டும் என்று எண்ணி என் அப்பாவையும் அவரையே கதை சொல்லச்சொல்லி, வார இறுதியில் ஓசூர் தாத்தா கதைகள் என்று அவரின் கதைகளையும் வெளியிட்டு வருகிறேன்.
இப்படியாக 2020 ஆக்டோபரில் ஆரம்பித்த கதை நேரத்தில் இன்று படிப்படியாக Spotify, Google Podcasts, Apple Podcasts, Amazon Music என்று பல தளங்கள் மூலம், 30க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து நான்கு லட்சம் முறைக்கும் மேலே இந்தக் கதைகள் கேட்கப்பட்டுள்ளன. எங்கள் வீட்டுக் குழந்தையைத் தாண்டி இன்று பல குழந்தைகள் தொடர்ந்து கதைகள் கேட்பது என்னை மேலும் கதைகள் சொல்ல ஊக்குவிப்பதாய் உள்ளது.
இயன்ற வரையில் கதைநேரத்தை interactive-ஆக வைத்துக்கொள்ள முயற்சித்து வருகிறேன். அப்படி குழந்தைகளின் பெற்றோர்கள் வழியே குழந்தைகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஒரு சர்வே வழியே அன்மையில் கேட்டிருந்தேன். அப்படி சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இந்தக் கதைகளை சொல்லி தூங்க வைப்பதுடன், அவர்களுமே கேட்டுத் உறங்குகிறார்கள் என்பது தெரிந்தபோது மிகப் பெரிய மனநிம்மதியைக் கொடுத்தது. பலர் அவர்களின் குழந்தைகள் மிக விரைவிலேயே தூங்க ஆரமித்துவிடுகிறார்கள் என்று சொல்வதைக் கேட்க்கும் போது அதைவிட பெரிய ஆனந்தம் வேறு இல்லை என்று தான் தோணும். நாள் தவறாமல் கதைகளை ஒளிப்பதிவு செய்ய என் மனைவி என்னை ஊக்கப்படுத்துவதாக இருப்பதும் சரி, மாமா இன்று கதை சொல்லலைன்னா நாளைக்கு ரெண்டு கதைகள் சொல்லனும் என்று செல்லமாய் கோபித்துக்கொள்ளும் எனது தங்கையின் குழந்தைகள் மட்டுமே இன்று கதை நேரம் 4500க்கும் மேற்பட்ட நபர்களால் பின்தொடரப்பட்டு வருகிறது.
இப்படியாக இருக்கும் இந்த கதை நேரம் podcast-ஐ நீங்களும் இலவசமாக அனைத்து podcast செயலிகளிலும் இலவசமாக கேட்கலாம். நிச்சயம் உங்கள் குழந்தைகளும், குழந்தைகளுக்கு நீங்கள் சிறுவர்களாக இருந்தபோது கேட்டு மகிழ்ந்த கதைகளையும் நன்னெறிக் கதைகளையும் சொல்ல விரும்புவோரும் பயனடைவீர்கள் என்று நம்புகிறேன். கதைகளைக் கேட்டுக்கொண்டே கற்பனை ஆற்றலை வளர்த்துக்கொள்வதுடன் தங்களின் கற்பனை உலகில் பயணிக்க தயாராகும் அனைத்துக் குழந்தைகளுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்.
பி.கு - இந்த QR code-ஐ உபயோகித்து அல்லது https://bit.ly/m/kadhaineram URL மூலம் உங்களுக்கு விருப்பமான செயலி வழியே நீங்கள் கதைநேரம் கேட்கலாம்.